;
Athirady Tamil News

யாழ் மாநகர சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு!!

0

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் மாநகர சபையில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு எதிராகவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் உறுப்பினர் பா.பத்மமுரளி “வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுவதாக” தெரிவித்த நிலையில், அவர் மாநகர சபை நடவடிக்கையில் ஒரு மாதம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே மாநகர முதல்வருக்கு எதிராகவும் குறித்த தீர்மானத்துக்கு எதிராகவும் மாநகர சபை உறுப்பினர் பா.பத்மமுரளியால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிரணவநாதனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டு கடிதத்தில், வைக்கோல் பட்டறை நாய் என்னும் வாக்கியம் ஒரு சாட்டு வாக்கியமாகும். வைக்கோல் பட்டறை அருகே அமர்ந்திருக்கும் இருக்கும் நாய் தானும் வைக்கோலை தின்னாது மாட்டினையும் தின்ன விடாது அது போல் தனக்கும் எடுத்துக்கொள்ளாமல் பிறர்களுக்கும் கொடுக்காமல் இருப்பவர் என்பது அதனுடைய விளக்கம் ஆகும்.

ஆக நான் எந்த ஒரு தனிபரை நோக்கியும் பிறழ்வான எந்த ஒரு வார்த்தைப் பிரயோகத்தையும் செய்யவில்லை.அத்துடன் அவ் வாக்கியத்தினை கூறியதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் நானாகவே சபையை விட்டு வெளியேறி விட்டேன். அதன் பிற்பாடே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எனவே காரணமில்லாமல் நன்கு திட்டமிட்டு சபை என்னை அமர்வுகளில் பங்கேற்காமல் தடை செய்ததுடன் எனக்கான மாதாந்த கொடுப்பனவினை நிறுத்தியமையும் சட்டவிரோதமான செயற்பாடு ஆகும். ஆதனை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அத்துடன் எதிர்வரும் பாதீடு தொடர்பான சபை அமர்வுகளில் நான் பங்கேற்பேன். என்பதுடன் அவ்வாறு நான் பங்கேற்பதினை தன்னுடைய நலன் கருதி கௌரவ முதல்வர் தடுத்து நிறுத்தும் பட்சத்தில் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றேன் – என பா.பத்மமுரளி தெரிவித்துள்ளார்.

மாநகர சபை அமர்வில் வைக்கோல் பட்டறை நாய் என கூறியவர் வெளியேற்றம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.