;
Athirady Tamil News

பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்த வாலிபர் ரத்த வாந்தி எடுத்து மரணம்- அன்பாக கவனித்து வந்த மனைவி அழுது புரண்ட பரிதாபம்!!

0

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகரா என்னும் பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவர் 8 வருடங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது திடீரென்று விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். விபத்தில் சிக்கிய பிரணவுக்கு உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், அதன்பிறகு அவரால் நடக்க முடியவில்லை. இதனால் அவரது வாழ்க்கை வீல்சேரிலேயே முடங்கியது. 8 ஆண்டுகளாக வீல்சேரிலேயே அவர் தனது வாழ்க்கையை நகர்த்தி வந்தார்.

தான் அனுபவித்து வரும் கஷ்டத்தை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்பதற்காக அவர் வீல் சேரில் இருந்தபடியே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார். அவரது விழிப்புணர்வு வீடியோக்கள் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த சகானா என்ற பெண்ணுடன் பிரணவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரணவ் போடும் விழிப்புணர்வு வீடியோக்கள் சகானாவை கவர்ந்தது. பிரணவின் வாழ்க்கையை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட சகானா அவரை காதலித்தார். பின்னர் பிரணவிடம் தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

ஆனால் பிரணவ் 8 ஆண்டுகளாக தான் வீல்சேரிலேயே வாழ்ந்துவரும் தனது வாழ்க்கையை சகானாவிடம் எடுத்துக் கூறி அவரை விட்டு விலக முயன்றார். ஆனாலும் அவர் பிரணவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். மேலும் தனது காதல் பற்றி பெற்றோரிடம் சகானா தெரிவித்தார். ஆனால் அவர்கள் மகளின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சகானா, பிரணவை மணப்பதில் விடாப்பிடியாக இருந்தார். ஒரு கட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறிய சகானா கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரணவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக செல்லத் தொடங்கியது.

வீல்சேர் மட்டுமே வாழ்க்கை என்று இருந்த பிரணவை, சகானா அன்பாக கவனித்துக் கொண்டார். பிரணவை அழைத்துக் கொண்டு கோவில் உளபட பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தார். வீல்சேரில் இருந்த படியே பிரணவ் கேக் வெட்ட அவரது பிறந்த நாளை சகானா கொண்டாடினார். தங்களின் காதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து அவர்கள் வாழ்ந்து வந்தனர். கூடவே பிரணவும், சகானாவும் ஒன்றாக எடுத்த விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட தொடங்கினார்கள். அதிவேகமாக வாகனங்களை ஓட்ட வேண்டாம் என பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை அவர்கள் வெளியிட்டனர். இதன் மூலம் அவர்கள் இருவருமே சமூக வலைதளங்களில் பிரபலமானார்கள்.

தனது காதல் மனைவியின் உருவத்தை உடல் முழுவதும் பிரணவ் பச்சை குத்திக் கொண்டார். இப்படி குதூகலமான அவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அவர்களின் வாழ்க்கையில் விதி திடீரென்று விளையாடியது. நேற்று முன்தினம் பிரணவ் தனது வீட்டில் இருந்தபோது திடீரென்று ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரணவ் பரிதாபமாக உயிரிழந்தார். காதல் கணவர் பிரணவ் திடீரென்று இறந்ததால் சகானா கடுமையான வேதனை அடைந்தார். கணவர் உடலை பார்த்து அவர் அழுது புரண்டு கண்ணீர் வடித்தார். வருகிற மார்ச் மாதம் வந்தால் அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியாகும். அதற்குள்ளேயே காதல் வாழ்க்கை பறிபோனதால் அவர் பரிதவித்தார். வீல்சேரிலேயே வாழ்க்கை முடங்கினாலும் அன்பான மனைவியை கொடுத்து அழகு பார்த்த பிரணவின் வாழ்க்கைக்கு விதி முற்றுப்புள்ளி வைத்து விட்டது. பிரணவின் மரணத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.