கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் தொண்டர் கைது!!
கேரளாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை திரும்ப பெறுமாறு காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக பல இடங்களில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர், பாலக்காடு மாவட்டம் சாலிசேரி பகுதிக்கு செல்வதாக இருந்தது.
அங்கும் இளைஞர் காங்கிரசார் கருப்புக் கொடி காட்டக்கூடும் என்பதால் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் அதனையும் மீறி, முதல்வர் வாகனம் வந்தபோது, ஒருவர் கருப்புக் கொடி காட்டி அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை கைது செய்தனர் விசாரணையில் அவர் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் என்பது தெரிய வந்தது.
ஏற்கனவே சாலிசேரியில் 4 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருந்த நிலையிலும், முதல்-மந்திரியின் வாகனம் செல்லும் போது தொண்டர் ஒருவர் கருப்புக் கொடி காட்டியிருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.