உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களின் தற்கொலையை கண்டித்து காங்கிரஸ் நாளை பேரணி!!
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான இந்திய தொழில் நுட்ப கழகங்களில் மாணவர்கள் தற்கொலை அடிக்கடி நிகழ்ந்து வருவது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. கடந்த 12-ந்தேதி மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த தர்ஷன் சோலங்கி என்ற தலித் மாணவர் தற்கொலை செய்திருப்பது மிகுந்த மன வேதனையை தருகிறது. அதேபோல சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த முதுநிலை பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து ஒன்றிய பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர் கல்வி நிறுவனங்களில் மேல் சாதியினரின் ஆதிக்கவும், சாதிய அடக்கு முறைகளும் தலைவிரித்தாடுவதால் தான் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன.
எனவே இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரின் அறிவுறுத்தலின் படி நாளை (திங்கட்கிழமை) மாலை 7 மணிக்கு எனது தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழக வளாகத்தின் முகப்பில் கண்டன பதாகைகளை தாங்கி மெழுகுவர்த்தி ஊர்வலம் நடக்கிறது. எனவே பேரணியில் பங்கேற்க காங்கிரஸ் பேரியக்கத்தினர் அனைவரும் அணி திரண்டு வருமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.