உஜ்ஜைனியில் சிவராத்திரியை முன்னிட்டு 18.82 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை!!
சிவராத்திரியை முன்னிட்டு நேற்றிரவு உஜ்ஜையினியில் 18.82 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் ேகாயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு மகா சிவராத்திரி விழா விளக்குகள் ஏற்றிக் கொண்டாடப்பட்டது. 20,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ஷிப்ரா ஆற்றங்கரையில் தீபம் ஏற்றினர். சுமார் 18.82 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. உள்ளூர் நிர்வாகம் மற்றும் மக்கள் உதவியுடன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் டாங்கிரிகர் கூறுகையில், ‘கடந்தாண்டு தீபாவளியின் போது அயோத்தியில் 15.76 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு உஜ்ஜயினியில் 18.82 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன’ என்றார். கின்னஸ் சாதனை பெற்றதற்கான சான்றிதழை, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் அந்த அமைப்பின் நிர்வாகிகள் வழங்கினர்.