வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் சப்ளை சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!!
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பிறகு இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிப்ரவரி 5, 6 தேதிகளில் சீனா செல்ல இருந்த பயணத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ரத்து செய்தார். இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்கா, சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று முன்தினம் கலந்து கொண்டனர். இதன் ஒருபகுதியாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதங்கள் அளித்து உதவும் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. மேலும், அமெரிக்காவின் இறையாண்மை, சர்வதேச விதிகளை மீறி அமெரிக்க விமானத் தளத்தின் மீது உளவு பலூனை பறக்கவிட்டு வேவு பார்த்த சீனாவின் பொறுப்பற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.