இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சில் முன்னேற்றம்: இங்கிலாந்து தொழில்துறை கூட்டமைப்பு இயக்குநர் தகவல்!!
இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள ஊக்கமளிப்பதாக இங்கிலாந்து தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குநர் சைமா குல்லாசி ஆல்ரிட்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையே பல்வேறு துறைகளில் தடையற்ற வர்த்தகம் செய்வது தொடர்பாக இரு நாடுகளும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடந்த 5-ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, 15 கொள்கைகள் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து 7-வது சுற்று பேச்சுவார்த்தை பிப்ரவரி 10ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. 8-வது சுற்றுபேச்சுவார்த்தை அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குநர் சைமா குல்லாசி ஆல்ரிட்ஜ் தெரிவித்துள்ளதாவது, “இருநாடுகளிடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இந்த முன்னேற்றம் இரு நாடுகளும் ஒப்பந்தங்களை ஏற்று கொள்வதற்கும், அதன் பயன்களை அனுபவிப்பதற்கும் உதவும். பசுமை எரிசக்தி, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியில் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. அதன் வளர்ச்சியில் பங்கேற்க இங்கிலாந்து உறுதுணையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.