;
Athirady Tamil News

காங்கிரஸ் இன்றி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை சாத்தியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்!!

0

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், ராய்ப்பூரில் வரும் 24-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசும், கே.சி.வேணுகோபால் எம்.பி.யும் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். கே.சி.வேணுகோபால் எம்.பி. கூறியதாவது:- கட்சியின் முதல் நாள் மாநாட்டின்போது, வழிகாட்டும் குழு கூட்டம் நடைபெறும். இதில் கட்சியின் உயர் அதிகார அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில், பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்கி, அதை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கு அதன் பங்கு தெரியும். காங்கிரஸ் கட்சி அதற்கான முயற்சியை ஏற்கனவே எடுத்துள்ளது.

அது பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில் உள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் காங்கிரஸ் கட்சியின் தெள்ளத்தெளிவான முயற்சி உள்ளது. 2024 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நிச்சயம் ஒன்றாக கொண்டு வருவோம். இந்திய ஒற்றுமை யாத்திரை அளித்துள்ள உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், உதய்பூர் சிந்தனை அமர்வின் நீட்டிப்பாகவும் ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாடு அமையும். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:- எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முக்கியம் என்பதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்கிறது. இது குறித்து ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகள் அணியை நாங்கள்தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று யாரும் சான்று அளிக்கத்தேவையில்லை. ஏனென்றால், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை வெற்றி பெறாது.

எனவே நாங்கள் நிதிஷ்குமார் கருத்தை வரவேற்கிறோம். கே.சி.வேணுகோபால் கூறியது போல இதுபற்றியும், 2024 தேர்தலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ராய்ப்பூர் மாநாட்டில் விவாதிக்கப்படும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வலுவான காங்கிரஸ் இல்லாமல், வலுவான எதிர்க்கட்சிகள் ஒன்றுமை சாத்தியம் இல்லை. இந்திய ஒற்றுமை யாத்திரை, இந்திய அரசியலுக்கான மாற்றுருவாக்கத்துக்கான தருணம், அதை நிதிஷ்குமார் ஒப்புக்கொண்டிருக்கிறார். நாங்களும் இதை வரவேற்கிறோம்.

எங்கள் பங்களிப்பை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். எந்த இடத்திலும் பா.ஜ.க.வுடன் சமரசம் செய்து கொள்ளாத ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ்தான். சில கட்சிகள் மல்லிகார்ஜூன கார்கே நடத்திய கூட்டத்துக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றின் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளன. பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு 2 முகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.