;
Athirady Tamil News

சீன அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – பலரை காணவில்லை !!

0

கொரோனா தொற்றுக்கு எதிராக சீனா வெற்றியை பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் அந்நாட்டு அரசாங்கத்தின் பூஜ்ஜிய கொவிட் விதிகளுக்கு எதிராக கடந்த நவம்பர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது எதிர்ப்பாளர்கள் மீதான அதிகாரிகளின் அமைதியாக ஆழமான அடக்குமுறை என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பல்வேறு நகரங்களில் கடந்த நவம்பர் மாதம் இருட்டில் வெற்று வெள்ளைத் தாள்களை ஏந்தியவாறு, கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சீனாவின் ஆளும் கமியூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர் ஷி ஜின்பிங் மீது விமர்சனத்தை முன்வைத்த அரிதான எதிர்ப்பு நடவடிக்கையாக அமைந்திருந்தது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட பல செயற்பட்டாளர்கள் தொடர்ந்தும் தடுப்பு காவலில் உள்ளதாக சீன செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை குழுக்களும் கல்வி சமூகத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவோரின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளதுடன், இவர்களில் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ மற்றும் நான்ஜிங் போன்ற ஏனைய நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் அடங்கியுள்ளனர்.

இந்த கைதுகள் குறித்த கேள்விகளுக்கு சீன அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை என்பதுடன், நண்பர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஊடாக 12 பேரின் பெயர்களை உறுதி செய்துள்ளதாக முன்னணி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சச்சரவுகளை தூண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த நபர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் நன்கு கல்வி கற்றவர்கள் என்பதுடன், அவர்கள் பிரித்தானியா மற்றும் அமெரிக்க பல்கலைகழகங்களில் படித்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இசைக்கலைஞர், ஆசிரியர் மற்றும் நிதித்துறை நிபுணர் ஆகியோரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.