கோட்டாவின் கதியே ரணிலுக்கும் ஏற்படும் – குமார வெல்கம!!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
மதுகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள பின்னணியில் நான் அரசியலில் இருந்து ஓய்வுப் பெற போவதாக ஒரு தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். 2022.மே மாதம் 09 ஆம் திகதி வன்முறை சம்பவத்தின் போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளானேன். பாரிய போரட்டத்திற்கு மத்தியில் உயிர் பிழைத்தேன். ஆகவே அரசியலில் இருந்து ஓய்வுப் பெற வேண்டிய தேவை தற்போது இல்லை.நாட்டுக்காக தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள் என்று மக்கள் விமர்சிக்கும் நாட்டில் வாழ்கிறோம்,தவறுகளை திருத்திக் கொண்டு இளம் தலைமுறையினருக்கு முன்னுரிமை வழங்கி சிறந்த மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தமாட்டார் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாது இதனால் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்படும்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அரசியலுக்கு பலவீனமானவர் என்று குறிப்பிட்டேன்,அப்போது என்னை கடுமையாக சாடினார்கள். இறுதியில் இரண்டரை வருடத்திற்குள் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பலவீனமான அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்தார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவறான ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ஜனாதிபதிக்கும் ஏற்படும். பொருளாதார பாதிப்பு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்க முடியாது என்றார்.