சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது – ருவான்!!
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே வரி அதிகரிப்பு உட்பட சில கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது. என்றாலும் டிசம்பர் மாதத்துக்குள் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியும் நாங்களும் மக்களுக்கு ஏதாவது சேவை ஒன்றை மேற்கொள்ளவே முயற்சிக்கிறோம். அவ்வாறு இல்லாமல் அரசியல் செய்வதில் பயனில்லை. அதனால் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
அவர்கள் எங்களுக்கு நிதி உதவி செய்வதாக இருந்தால், நாட்டின் வங்குராேத்து நிலைமையை அறிந்துகொண்டு எங்களுக்கு நிபந்தனைகளை விதிப்பார்கள். அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு எமக்கு பணியாற்ற வேண்டி ஏற்படுகிறது.
நாட்டின் திறைசேரியில் பணம் இல்லை. தேர்தலை நடத்துவதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை. இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது.
அவர்களின் நிபந்தனைகளுக்கமையவே வரி அதிகரிக்கவேண்டி ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு இல்லாமல் மாற்று வழி எதுவும் எங்களிடம் இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாக இருந்ததால், அவர்கள் தெரிவிக்கும் கஷ்டமான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டி ஏற்படுகிறது.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மைக்காலத்தில் எடுத்த சில தீர்மானங்கள் மிகவும் கடுமையான தீர்மானங்களாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது.
இவ்வாறு கஷ்டமான தீர்மானங்களை எடுப்பதற்கு எதிர்க்கட்சியில் இன்றும் யாரும் இல்லை. அவ்வாறான தீர்மானம் எடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. முதுகெலும்பு இருக்கும் தலைவர்களுக்கே இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுக்க முடியும்.
என்றாலும் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் கடுமையான தீர்மானங்களுக்கு இன்னும் சில மாதங்களில்,டிசம்பராகும்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அப்போது ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.