13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் ; யாழில் அர்ஜுன் சம்பத் தெரிவிப்பு!!
யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவோம் என்றார்.
சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐந்து ஈச்சரங்களையும் தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து இந்து மக்கள் கட்சியினர் வருகை தந்த நிலையில், யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்காக தமது சொந்த நிதியில் யாழ்ப்பாணம் மத்திய கலாசார நிலையத்தை உருவாக்கி கையளித்துள்ளது. குறித்த கட்டடத் தொகுதி யாழ் மாநகர சபையிடம் கையளிக்கப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக இந்தியா தொடர்ந்தும் குரல் கொடுக்கவும் செயற்படவும் தயாராக இருக்கின்ற நிலையில் 13-ஆம் திருத்தம் தொடர்பில் சிலர் அறியாமல் பேசுகின்றனர். 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இங்கு நடைபெறுகின்ற மதமாற்றங்கள் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் கவனத்தில் கொள்வோம்.
திருகோணமலையில் உள்ள திருகோணேச்சர ஆலயம் தொடர்பாகவும் அங்கு தொல்லியல் திணைக்களத்தினரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் – என்றார்.