;
Athirady Tamil News

நிறுத்தப்படும் மீட்பு நடவடிக்கைகள் – துருக்கி வெளியிட்ட புதிய தகவல்!!

0

துருக்கியில் நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரு பிராந்தியங்கள் தவிர்த்து, அனைத்து பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கையானது 46,000ஐ தொட்டுள்ளது. ஒரே ஒரு பிராந்தியத்தில் மட்டும் 23,000 பேர் வரையில் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், Kahramanmaras மற்றும் Hatay பிராந்தியங்கள் தவிர்த்து, எஞ்சிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டுள்ளதாக நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, கட்டிட இடிபாடுகளில் சிக்கி, மேலும் எவரேனும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், துருக்கியில் மொத்தமாக 345,000 தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பல எண்ணிக்கையிலான மக்கள் மாயமானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறுகின்றனர். அது மட்டுமின்றி, இன்னும் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று துருக்கியோ அல்லது சிரியாவோ இதுவரை உறுதியாக கூறவில்லை.

இதனிடையே, இரண்டு மாகாணங்களில் சுமார் 40 கட்டிடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன, ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் இந்த எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் துருக்கிக்கு சென்றுள்ளதுடன் மனிதாபிமான உதவியாக 100 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.