;
Athirady Tamil News

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரிலுள்ள படை முகாம் அகற்றப்பட வேண்டும் – சாணக்கியன்!!

0

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரில் படை முகாம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடன் தேர்தல் பரப்புரை மக்கள் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“வீதியின் இரண்டு பக்கங்களிலும் மக்களை காணமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. நாம் பார்க்க வேண்டும் என்றால் இராணுவ முகாம்களைத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்கள் என்றால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தான்.

எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான இணைந்த வட,கிழக்கென்பது சாத்தியமாகுமாக இருந்தால், அது நிச்சயமாக சாத்தியமாகும். அப்படி சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நடைபெறவுள்ள இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தல்.

நாங்கள் வீதி வீதியாக இறங்கி இராணுவமே வெளியேறு என கோசங்களை எழுப்புகின்றோம். அதேபோன்று இதனை பாராளுமன்றத்திலும் சொல்லும் ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 ஆசனங்களிலிருந்து 10 ஆசனங்களுக்கு வாக்கு சரிவு வந்திருக்கின்ற காரணத்தினால், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் இராணுவமே வெளியேறு என வீதியிலே சொன்னாலும் கூட, இது தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரைக்காக சொல்லுகின்ற கோசமே தவிர இது மக்களுடைய அபிலாசை இல்லை என்ற சந்தேகம் சில வேளைகளில் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எங்களுக்கான வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் சர்வதேசத்துடன் பேசும் போது எங்களுடைய பலம் குறைந்துள்ளதாகவே காணக்கூடியதாக இருகின்றது.

இதன்காரணமாகவே நாம் சொல்கின்றோம் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த சின்னம் தலைவர் காட்டிய சின்னம், உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்த சின்னம். ஆகவே மக்கள் இந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.“ என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.