969-வது அவதார தினம்: ஏழுமலையானுக்கு குளம் வெட்டி, தோட்டம் அமைத்து கைங்கர்யம் செய்த அனந்தாழ்வார்!!
ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து, முதன் முதலில் குளம் வெட்டி, மலர் செடிகளை பயிரிட்டு, ஏழுமலையானுக்கு மலர் மாலைகளை சூட்டி கைங்கர்ய சேவை செய்த அனந்தாழ்வாரின் 969-வது அவதார தின உற்சவம், திருப்பதியில் நேற்று கோலாகலமாக நடந்தது. ராமானுஜர் காலத்தில், திருமலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இதனால், கோவிலுக்கு மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். மேலும், கோவிலில் கைங்கர்யம் செய்பவர்களும், காலையில் திருமலைக்கு சென்றுவிட்டு மாலையில் திருப்பதிக்கு திரும்பி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதோடு, வாகன போக்குவரத்து வசதி இல்லாத அந்த கால கட்டத்தில், நடந்து சென்றே ஏழுமலையானை வழிபட்டனர். அதேபோல், கைங்கர்யத்துக்கு தேவையான பொருட்கள் தலைச் சுமையாகவும், மாட்டு வண்டி மூலமாகவும் மட்டுமே திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், ராமானுஜர் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீரங்கத்தில் இருந்து அனந்தாழ்வார் எனும் வைணவர், தனது மனைவியுடன் ஏழுமலையானுக்கு சேவை செய்ய திருமலைக்கு வந்தார். தொடர்ந்து, திருமலையில் தங்கிய அவர், இப்போது ஏழுமலையான் கோவிலுக்கு பின்பக்கம் அனந்தாழ்வான் தோட்டத்தில் உள்ள குளத்தை வெட்டி, அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, மலர் தோட்டங்களை ஏற்பாடு செய்து, ஏழுமலையானுக்கு சேவை செய்து வந்தார். இதற்கிடையே, மலர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, தனது 5 மாத கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து அனந்தாழ்வார் குளம் வெட்டிக் கொண்டிருந்தார்.
அவருடைய பக்தி சிரத்தையை உலகுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய ஏழுமலையான், சிறுவனாக அவதாரம் பூண்டு அனந்தாழ்வான் மனைவிக்கு குளம் வெட்டும் பணியில் உதவி செய்து வந்தார். அதேநேரம், இறை சேவையில் வேறு நபர் குறுக்கிடுவதை விரும்பாத அனந்தாழ்வார், கையில் கடப்பாரையுடன் சிறுவனை விரட்டிச் சென்றார். ஆனால், அந்த சிறுவன் வேகமாக ஓடினான். இதனால், அவன் மீது அந்த கடப்பாரையை அனந்தாழ்வார் வீசி எறிந்தார். அது, சிறுவனின் தாடையில் பட்டு ரத்தம் வழிந்தது.
ஆனால் அந்த சிறுவன் அதையும் பொருட்படுத் தாமல் கோவிலுக்குள் ஓடி மறைந்து விட்டான். பின்னர், அனந்தாழ்வார் மலர்களை மாலையாக தொடுத்து எடுத்துக் கொண்டு, ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது, ஏழுமலையான் தாடையில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்ட அவர் பதறினார். மேலும், தன்னை சோதிப்பதற்காக ஏழுமலையானே சிறுவனாக உருவெடுத்து வந்ததை உணர்ந்தார். பின்னர், ஏழுமலையான் தாடையில் நாமக்கட்டியைபொடி செய்து பூசினார்.
அதன்பிறகு, ரத்தம் வழிவது நின்றுவிட்டது. இதன் அடையாளமாகவே, இப்போதும் ஏழுமலையானின் தாடையில் நாமக்கட்டி பூசப்படுகிறது. மேலும், அனந்தாழ்வார் வீசிய கடப்பாரை இப்போதும் ஏழுமலையான் கோவில் முன்பக்க வாசலில் தொங்கவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனந்தாழ்வாரின் கைங்கர்ய 4 சேவைகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய அவதாரத் திருநாளன்று, அனந்தாழ்வார் அமைத்த-தோட்டத்தில் கோவில் ஜீயர்கள் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் அடிப்படையில், அவருடைய 969-வது அவதாரத் திருநாளான நேற்று, ஏழுமலையான் கோவில் ஜீயர்கள்-இணைந்து, பக்தர்கள் மற்றும் அனந்தாழ்வார் பரம்பரையினருக்கு அருளாசி வழங்கினர்.