பிரேசிலில் கனமழைக்கு 24 பேர் பலி- பல இடங்களில் நிலச்சரிவு!!
பிரேசில் நாட்டில் தென்கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாங்பவுலோ மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இகபெல்லா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
ரோடுகள் பலத்த சேதம் அடைந்தது. இதில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தது. ரோடுகள் துண்டாகி கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. மழை-வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 24 பேர் பலியாகி விட்டனர். இந்த பேய் மழைக்கு கடற்கரையோர பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது.
மீட்பு பணிகள் இங்கு முடுக்கி விடப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இடைவிடாமல் மழை கொட்டி தீர்ப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இடிந்து கிடக்கும் வீடுகளின் இடிபாடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழையால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.