தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர்- அரசு பள்ளி நிகழ்ச்சியில் பரபரப்பு!!
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை திரும்ப பெற்று மறு சுழற்சி செய்து பள்ளிக்கு தேவைப்படும் உபகரணங்களை செய்து தரும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, நகர மன்ற தலைவர் நகர மன்ற துணைத் தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் பின்னர் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளிகளில் மறு சுழற்சி செய்வதற்கான ஆணையை டிஸ்லரி மேலாளர் கணேசனிடம் வழங்கினார்.
மேலும் மாணவர்களின் பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறை விளக்கத்தையும் கேட்டறிந்தார் நிகழ்வு முடிவதற்குள் மாவட்ட ஆட்சியர் புறப்பட்டு சென்ற நிலையில் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து மாணவ மாணவியர்கள், அரசு அதிகாரிகள், நகராட்சி, நிர்வாகிகள் என அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர். ஆனால் தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக முதன்மை கல்வி அலுவலர் ராமன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அதிகாரி, தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் உரையாடிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.