;
Athirady Tamil News

புதிய கல்விக்கொள்கை இளைஞர்களை புதிய நூற்றாண்டுக்கு தயார்படுத்தும்: பிரதமர் மோடி!!

0

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டமான ரோஜ்கார் மேளா நேற்று உத்தரகாண்டில் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- துணை ஆசிரியர்கள் உள்பட ஏராளமான பணியிடங்களுக்கு இன்று (நேற்று) பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மிகப்பெரிய மாற்றத்துக்கான ஊடகமாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.

புதிய கல்விக்கொள்கை இளைஞர்களை புதிய நூற்றாண்டுக்கு தயார்படுத்துகிறது. இதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசிடம் இருந்து கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பணி நியமன கடிதங்களை பெற்றுள்ளனர். இத்தகைய ஆட்சேர்ப்பு பிரசாரங்கள் பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிகப்பெரிய அளவில் நடந்து வருகின்றன.

இன்று உத்தரகாண்ட் மாநிலமும் இதன் ஒரு பகுதியாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உத்தரகாண்ட் இளைஞர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்ப மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக உத்தரகாண்ட் உள்கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய முதலீடுகள் செய்யப்படுகின்றன. இந்த மலைப்பிராந்திய மலை மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான இந்த முதலீடுகள் இளைஞர்களுக்கு தங்கள் வீடுகளுக்கு அருகே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

ஒவ்வொரு இளைஞரும் தாங்கள் விரும்பும் புதிய வாய்ப்புகளைப் பெற வேண்டும். அதேநேரம் முன்னேற சரியான தளத்தையும் அணுக வேண்டும் என்பது மத்திய மற்றும் உத்தரகாண்ட் அரசின் தொடர்ச்சியான முயற்சி ஆகும். அரசுப்பணிகளில் ஆட்சேர்ப்பு பிரசாரமும் இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு படியாகும் மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் ரெயில் பாதைகள் அமைப்பதன் மூலம் இணைப்பு மேம்படுவதுடன், அதிக அளவிலான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன.

சாலை, ரெயில் மற்றும் இணையம் மூலம் தொலைதூர பகுதிகள் இணைக்கப்பட்டதன் விளைவாக உத்தரகாண்டில் சுற்றுலாத்துறை விரிவடைந்து வருகிறது. சுற்றுலா வரைபடத்தில் புதிய இடங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக உத்தரகாண்ட் இளைஞர்கள் இப்போது பெரிய நகரங்களுக்கு செல்வதற்கு பதிலாக தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே அதே வேலைவாய்ப்புகளைப் பெறுகிறார்கள். முத்ரா யோஜனா, சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.