ஈரோட்டில் இன்று 2-வது நாளாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று முதல் நாள் பிரசாரத்தை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 9-க்கும் மேற்பட்ட இடங்களில் பேசினார். அதனைத்தொடர்ந்து இன்று மாலை 2-வது நாளாக தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
மாலை 5 மணிக்கு எஸ்.கே.சி.ரோடு அர்ஜுனா சுவிட்ஸ் கடை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து ஆலமரத்து மெயின் ரோடு சமாதானபுரத்தில், அண்ணா டெக்ஸ்மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதேபோல் தே.மு.தி.மு.க. சார்பில் போட்டிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியிலும் பேசினார். இந்நிலையில் 3-வது நாளான இன்று மாலையும் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து சம்பத் நகர் பகுதியில் பேசுகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே தனது முதல் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது 2-வது கட்ட பிரசாரத்தை ஜி.கே.வாசன் மேற்கொள்கிறார். வெட்டுக்காட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பேச்சாளர்களும், சினிமா பிரபலங்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை நடிகை விந்தியா பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் என தொடர்ந்து 3 நாட்கள் நடிகை விந்தியா அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இறுதி கட்ட பிரசாரம் நெருங்கி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.