வாக்காளர்களுக்கு குக்கர், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொடுப்பதாக புகார்!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் அவை பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதோடு இல்லாமல் ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசு பொருட்களும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் அவையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வாகன சோதனையில் பறக்கும் படையினருடன் போலீசார் மற்றும் துணை ராணுவனத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா? என்று தீவிரமாக விடிய, விடிய கண்காணித்து வருகிறார்கள். மேலும் சந்தேகத்துக்கு இடமானவர்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
கிழக்கு தொகுதி முழுவதும் ஆங்காங்கே போலீசாரும், துணை ராணுவனத்தினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சக்தி நகர் பகுதிக்கு நேற்று காலை ஒரு வேன் வந்தது. அதில் இருந்து வேட்டி சட்டை அணிந்து இருந்த ஒருவர் வாக்காளர் பட்டியலுடன் கீழே இறங்கினார். பின்னர் அவர் அந்த பகுதியை சேர்ந்த 5 குடும்பத்தினருக்கு புதிய குக்கர்களை வழங்கினார். பின்னர் அவர் டோக்கன் விநியோகம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஒரு குடோன் இருப்பதாகவும் அங்கு வந்து மற்றவர்கள் குக்கர் பெற்று செல்லுங்கள் என்று கூறி டோக்கன் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்காளர்கள் புதிய குக்கருடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதே போல் மற்றொரு வீடியோவில் வயதான தம்பதியினர் குக்கர் பெற்று கொண்டவர்களிடம் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்தை காட்டி வாக்களிக்கும் படி கேட்பதும் பதிவாகி இருந்தது. இதே போல் 53-வது வார்டுக்கு உட்பட்ட காளமேகம் தெரு, அகஸ்தியர் தெரு, மீரான் முகைதீன் தெரு மற்றும் சொக்கலிங்கம் பிள்ளை தெரு ஆகிய குறுகலான பகுதிகளுக்கு வேட்டி-சட்டை அணிந்த ஒருவர் ஸ்கூட்டரில் வந்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி உள்ளார். பின்னர் அந்த வீட்டில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்து கேட்டு பட்டுபுடவையும், ரூ. 500-ம் கொடுத்து உள்ளார்.
மேலும் பட்டு புடவை வேண்டாம் என்றால் கூடுதலா ரூ. 1000 வழங்கி உள்ளார். இது தவிர மளிகை பொருட்கள், சிக்கன் பிரியாணியும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்த போது யாரும் இல்லை. இதே போல் மற்றொரு கட்சி சார்பில் ஈரோடு சிந்தன் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு வழங்கப்பட்டதாகவும், மற்ற இடங்களில் டோக்கன் விநியோகம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து அங்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சென்று கண்காணித்தனர். அங்கும் யாரும் இல்லை. ஏற்கனவே பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் ரூ. 1000 வழங்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தேர்தல் நெங்குவதால் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வருவதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.