பயங்கரவாதிகள், சமூக விரோத கும்பல்களை ஒடுக்க 72 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!!
தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 50 இடங்களில் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நடந்த விசாரணையின் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசியமாக இந்தியாவில் உள்ள சமூக விரோத கும்பல்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அடுத்தடுத்து பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர்.
உத்தரபிரதேசத்தில் பிலிபிட் நகரில் ஆயுத வியாபாரி ஒருவர் வீட்டில் நடந்த சோதனையில் பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் சமூக விரோத கும்பல்களுக்கு விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று நடந்து வரும் சோதனையில் பல இடங்களில் ஆயுதங்கள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆயுதங்களை வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள். இன்று பஞ்சாப்பில் மட்டும் 30 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சமூக விரோத மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இந்த சோதனையை அதிரடியாக மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.