தேர்தலுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை முழுமையாக வழங்க முடியாது – அமைச்சரவை பேச்சாளர்!!
நாட்டின் நிதி நெருக்கடி குறித்து திறைசேரி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அதனையடுத்து தேர்தல் ஆணைக்குழு அதன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. எனவே எந்தவகையிலும் ஆளும் கட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு துணை போகவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வரவு – செலவு திட்டத்தில் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் , தற்போது அதனை முழுமையாக விடுவிக்க முடியாதளவிற்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே சகல அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்ட செலவில் 5 சதவீதத்தைக் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நாம் முன்னின்று செயற்படுவோம். நாம் எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகித்த போது நாட்டில் இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் காணப்படவில்லை.
எந்த பிரச்சினைகளும் இல்லாத நிலையிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டமையின் காரணமாகவே நாம் சர்வதேசத்தை நாடினோம்.
ஆனால் தற்போது முற்றிலும் அதற்கு மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது. எனவே தான் தேர்தலுக்கான நிதியை வழங்குவது நெருக்கடியாகும் என்று திறைசேரியும் , நிதி இன்றேல் தேர்தலை நடத்துவது கடினமாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளன.
இதில் எந்தவகையிலும் அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை. சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்தவொரு சர்வதேச அமைப்போ தேர்தலை நடத்துமாறு எமக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை.
எந்தவொரு அமைச்சிற்கும் வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி முழுமையாகக் கிடைக்கப் பெறுவதில்லை. நாட்டின் நிதி நிலைமைகளின் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படும்.
அதற்கமையவே இம்முறை தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் , அதனை விடுவிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாறாக இவ்விடயத்தில் ஆளுங்கட்சியின் எவ்வித தலையீடுகளும் இல்லை என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”