;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று அழிக்கப்பட்டது – பிரதி பணிப்பாளர்!!!

0

யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்

யாழ் போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து மலசலக்கழிவு மற்றும் ஏனைய கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்டு பண்ணைக்கடலினுள் செலுத்தப்படுகின்றது இது கடந்த 20 வருடமாக நடைபெற்று வருகின்ற ஒரு செயல்முறையாகும்

ஆனால் தொழில்நுட்ப வேலைகளில் ஏற்பட்ட தடங்கல் நிலை காரணமாக இது கடந்த இரண்டு வருடங்களாக இந்த வேலைகளில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன

குறிப்பாக பண்ணை பகுதியில் இந்த நீரை அனுப்பும் இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு அந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இருந்தோம்

இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் இரண்டு நாட்கள் வெளியேறாமல் தடுக்கப்பட்டன

இதன் காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் வெளியேற்றப்பட வேண்டிய கழிவு நீரின் அளவு அதிகரித்திருந்தது

வைத்தியசாலையில் உணவு தேவைக்கு மற்றும் ஏனைய தேவைகளுக்கு இரண்டு வகையான நீரை பயன்படுத்துகின்றோம் வைத்திய சாலையில் மூன்று கிணறுகளில் இருந்து இறைக்கப்படும் நீர் வைத்தியசாலை பொது தேவைக்கு பயன்படுத்தப்படும்

குறிப்பாக நீருக்கு கட்டாயமாக குளோரின் இட்டு அதனை பாவித்து வந்தோம் ஆனால் இந்த கழிவுநீர் வெளியேற்றம் திருத்த வேலைகள் காரணமாக தடைப்பட்டிருந்த போது சடுதியாக நில மட்டத்தில் கழிவு நீரின் தன்மை அதிகரித்ததினால் கிணற்றில் அதிகளவு கழிவுநீர் உள்ள கிருமிகள் சென்றதன் வெளிப்பாடாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், சத்திர சிகிச்சை கூட உத்தியோகத்தர்கள் விடுதியில் கடமையாற்றுகிறவர்கள் வயிற்றோட்ட நோயால் பாதிக்கப்பட்டார்கள்

இது எமக்கு உடனடியாக தெரிய வந்து கடந்த சனிக்கிழமை உடனடியாகவே அந்த கிணற்று நீரினை பரிசோதனைக்காக அனுப்பினோம் அதுபோல மேலதிக குளோரின் இட்டு கிருமி தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது ஆய்வு கூடத்தில் ஒருவகை பக்டீரியா காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது மிகையான குளோரின் ஊட்டத்தின் மூலம் இந்த கிருமிகள் அழிக்கப்பட்டன

தற்போது கிருமித் தொற்று நிலமை சுமுகமாக உள்ளது இது ஒரு தற்காலிகமாக ஒரு ஏற்பட்ட பிரச்சனையே தவிர திட்டமிடப்பட்ட விடயம் அல்ல இந்த விடயங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளது

இந்த நீர் தொற்றின் காரணமாக மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய வைத்திய சாலையின் சுகாதார உதவியாளர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட 400 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள் சுமார் 50 பேர் அளவில் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்கள்

எனினும் தற்போது பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை தற்பொழுது அந்த குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு அது தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.