அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் எண்ணெய் கசிவு- ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம்!!
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானம் ஸ்வீடனில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 300 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. போயிங் 777-300ER விமானம் மூலம் இயக்கப்பட்ட அந்த விமானம், என்ஜின் ஒன்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், திருப்பிவிடப்பட்டது. எண்ணெய் கசிவைத் தொடர்ந்து, இயந்திரம் நிறுத்தப்பட்டது. பின்னர் விமானம் பாதுகாப்பாக ஸ்டாக்ஹோமில் தரையிறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி தெரிவித்தார்.
தரை ஆய்வின் போது, என்ஜின் இரண்டின் வடிகால் மாஸ்டில் இருந்து எண்ணெய் வெளியேறுவதைக் காண முடிந்தது என்றும் இதுதொடர்பாக ஆய்வு நடந்து வருவதாகவும் அதிகாரி கூறினார். மேலும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.