மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கான உறுப்பினர் கட்டணம் ரூ.1,000 ஆக உயர்வு!!
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் தேசிய நடைபயணம் கட்சிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. கட்சி ரீதியாக அமைப்பை வலுப்படுத்துவதற்கு மாநில தலைவர்கள், நிர்வாகிகள் அதிக அர்ப்பணிப்பை காட்ட வேண்டும் என ராகுல்காந்தி விரும்புகிறார். இந்நிலையில் கட்சியின் நிதி வருவாயை பெருக்கும் வகையில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை காங்கிரஸ் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கான உறுப்பினர் கட்டணம் ரூ.100-ஆக உள்ளது. இந்த கட்டணம் ஆண்டுக்கு ரூ.1,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதில் ரூ.400 மேம்பாட்டு கட்டணமாகவும், ரூ.300 கட்சி பத்திரிகைக்கும் வழங்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த உறுப்பினர்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரமாகவும், 5 ஆண்டுகளுக்கு மேம்பாட்டு கட்டணம் ரூ.1,000 ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கட்சியின் நிதிநெருக்கடியை சமாளிக்க உதவியாக இருக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையே காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கும் காங்கிரஸ் தயராகி வருகிறது. முன்னாள் பிரதமர்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பார்லிமெண்ட் கட்சி தலைவர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையான 23 க்கும் மேல் உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.