;
Athirady Tamil News

90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு ரூ.1 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய உரிமையாளர்!!

0

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட பேன்சி நம்பர்களை வாங்குவதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர். அதில் சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் அந்த எண்ணை ஏலத்தில் விடுகிறார்கள்.

அது போன்று இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தான் 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஸ்கூட்டிக்கு பேன்சி நம்பர் பெறுவதற்காக ரூ.1 கோடி செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தான் வாங்கிய ஸ்கூட்டிக்காக எச்.பி.-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆன்-லைன் ஏலத்தில் கலந்து கொண்டார். அப்போது எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து அந்த எண்ணுக்கு ஆரம்ப கட்டமாக ரூ.1,000 ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஒவ்வொருவரும் ஏலத் தொகையை உயர்த்தி கொண்டே சென்ற நிலையில், அதில் ஒருவர் அந்த எண்ணை ரூ.1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பெற்றார். இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணை பெறுவதற்காக ரூ.1.12 கோடி செலவழித்த நபர் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.