என்னை கொலை செய்ய முதல்-மந்திரி ஷிண்டே மகன் சதி: சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டு!!
மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டேயை அவதூறாக பேசியதாக தானேயில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தன்னை கொலை செய்ய சதி செய்வதாக சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக சஞ்சய் ராவத், மும்பை போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் எனது பாதுகாப்பு திரும்பபெறப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குண்டர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருந்தேன். இந்தநிலையில் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. என்னை கொலை செய்ய தானே ரவுடி ராஜா தாக்குரை ஏவி உள்ளதாக எனக்கு இன்று தகவல் கிடைத்து உள்ளது.
இந்த தகவலை நான் உறுதி செய்து உள்ளேன். என் மீது தாக்குதல் நடத்த ரவுடி ராஜா தாக்குர் தயராகி வருகிறார். பொறுப்பு உள்ள குடிமகனாக இந்த தகவலை நான் உங்களுக்கு கூறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை ஷிண்டே தரப்பு மறுத்து உள்ளது. இது தொடர்பாக அவரது ஆதரவு எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறுகையில், “சஞ்சய் ராவத் அனுதாபத்தை பெற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். அவர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் சஞ்சய் ராவத் இதேபோல பல குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.
அதில் எந்த ஆதாரமும் இருக்காது. அவர் கூறுவது போல ஸ்ரீகாந்த் ஷிண்டே ஒருபோதும் செய்ய மாட்டார் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்படும்” என்றார். சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், “இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்த துரோக எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அடங்குவதில்லை. மாகிமில் ஒரு எம்.எல்.ஏ. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.