தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்றம் இடமளிக்காது !!
தேர்தலை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் இடமளிக்காது என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று எதிர்க்கட்சி பிரதமகொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நான் துறைமுக நகரம் தொடர்பான விவாதத்தில் அதுபற்றி பேசாது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேசுவதற்கே எதிர்பார்த்துள்ளேன். மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். தேர்தல் தொடர்பில் நிலவும் பிரச்சினையில் வேட்பாளர்களின் கட்டுப்பணத்தைக்கூட திருப்பிக்கொடுக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாக்குரிமை என்பது அடிப்படை மனித உரிமையாகும். உயர்நீதிமன்றமே அந்த உரிமையை பாதுகாக்கின்றது. இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலை வாரிவிடுவது அந்த உரிமையை மீறுவதாகவே அமையும். இந்த விடயத்தில் நிதி அமைச்சின் செயலாளர், அச்சக பிரதானி ஆகியோர் அரசியலமைப்பை மீறி செயற்படுகின்றனர். சுற்றுநிருபத்தை காட்டி அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது.
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தால் அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு உதவ வேண்டும். இதனை செய்யாவிட்டால் மக்களின் உரிமைகளை மீறுவதாகவே அமையும். எவ்வாறாயினும் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நூறு அல்ல இருநூறு வீதம் நம்பிக்கை உள்ளது. தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்காது என்று நினைக்கின்றோம்.
நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. அப்படியென்றால் ஏன் இங்கே ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தலுக்காக வழங்க முடியாது என்று கேட்கின்றேன்.
இந்நிலையில் இந்த அரசாங்கம் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உள்ளது. எங்களுக்கு தேர்தல் வேண்டும். தேர்தலை நடத்தப் போவதில்லை என்று அரச தரப்பில் கூறப்படுகின்றது. இங்கு சிலர் தேர்தல் வேண்டுமென்று கூறினாலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதற்கு ஆதரவாக இருப்பதில்லை என்றார்.