;
Athirady Tamil News

ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் !

0

எந்த நாட்டுடனும் பகைகளை ஏற்படுத்திக்கொள்ளாது அனைத்து நாடுகளுடனும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கம் செயற்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

காலத்திற்கு காலம் எவ்வாறு ஒவ்வொரு கட்சிகளும் துறைமுக நகரம் தொடர்பில் நிலைப்பாடுகளை மாற்றியுள்ளன. உலக நாடுகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருளாதார நகரங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் உள்ளன. இந்நிலையில் நாங்கள் இங்கிருக்கும் வளத்தை பயன்படுத்தி எவ்வாறு வருமானத்தை அதிகரித்து வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது என்று சிந்தித்து செயற்பட வேண்டும்.

வருமானத்தை அதிகரித்தாலே நாட்டை முன்னேற்ற முடியும். அரச சேவைக்கே அதிகளவில் நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் 107 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும் பாகிஸ்தானில் 101 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும், பங்களாதேஷில் 140 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும் அரச ஊழியர் இருக்கும் நிலையில் இலங்கையில் 16 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் அரச ஊழியர் இருக்கின்றார். இந்நிலையில் அரச வருமானத்தில் 80 வீதத்தை அரச சேவையை நடத்திச் செல்லவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவுமே பயன்படுத்தப்படுகின்றது.

இதனை எப்படி நாங்கள் முகம்கொடுத்து நிர்வாகம் செய்யப் போகின்றோம் என்றே பார்க்க வேண்டும். வரிகளை அதிகரித்தாலும் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் கடனுக்கான வட்டிகளை அதிகளவில் செலுத்த வேண்டியுள்ளது.
லெபனான், இரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் அதிகரித்திருந்தன. லெபனான் போன்ற நாடுகளில் மின்வெட்டு நேரத்தைக்கூட கூற முடியாதளவுக்கு நிலைமை உள்ளது. ஆனால் இங்கே முன்னேற்றம் கண்டு பணவீக்கத்தை 90இல் இருந்து இப்போது குறைத்து வருகின்றோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.