;
Athirady Tamil News

ரோகிணி சிந்தூரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறேன்- ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா!!!

0

கர்நாடகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி இடையே மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 2 பெண் அதிகாரிகளையும் அதிரடியாக இடமாற்றம் செய்து கர்நாடக அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. மேலும் கர்நாடக அரசு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்று ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ரூபா ரோகிணி சிந்தூரிக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தனது டுவிட்டர் பக்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டு கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அன்புமிக்க பத்திரிகையாளர்களே, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக நான் எழுப்பியுள்ள ஊழல் புகார்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துங்கள். ஊழலுக்கு எதிராக போராடுகிறவர்கள் யாரையும் நான் தடுக்கவில்லை. ஊழல் சாமானிய மக்களை தான் அதிகம் பாதிக்க செய்கிறது. அதே நேரத்தில் வேறு வடிவத்திலும் விசாரணை நடைபெற வேண்டும். அதாவது தமிழ்நாட்டில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். நானும், எனது கணவரும் இன்னும் ஒன்றாக தான் வாழ்கிறோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

இந்த தவறை செய்து கொண்டிருக்கும் குற்றவாளியிடம் (ரோகிணி சிந்தூரி) கேள்வி எழுப்புங்கள். அவரது செயல் பல குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுத்துகிறது. இல்லாவிட்டால் இன்னும் பல குடும்பங்கள் அழிந்துவிடும். நான் வலுவான பெண். அவருக்கு எதிராக போராடுவேன். அவரால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்காகவும் நான் போராடி கொண்டிருக்கிறேன். அனைத்து பெண்களுக்கும் என்னை போல் போராடும் பலம் இருப்பது இல்லை. அத்தகைய பெண்களுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். இந்தியா குடும்ப கலாசாரங்களுக்கு பெயர் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதை நாம் பாதுகாக்க வேண்டும். நன்றி. இவ்வாறு ரூபா தெரிவித்துள்ளார். இதற்கிடையே தனக்கு எதிராக அவதூறாக பேசுவதற்கு ரூபாவுக்கு தடை விதிக்குமாறு கோரி ரோகிணி சிந்தூரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.