பாகிஸ்தானுக்கு ரூ.5800 கோடி கடன் வழங்க சீனா ஒப்புதல்!!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.5800கோடி கடனுதவி வழங்குவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரி வருவாயை உயர்த்தும் வகையிலான நிதி மசோதா ஒருமனதாக அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் எந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தானின் நட்பு நாடாக இருந்து வரும் சீனா அந்நாட்டுக்கு 700மில்லியன் டாலர் அதாவது ரூ.5800கோடி கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் தனது டிவிட்டர் பதிவில்,‘‘பாகிஸ்தானுக்கு 700மில்லியன் டாலர் கடனுதவி வழங்க சீனாவின் மேம்பாட்டு வங்கி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. இந்த தொகை இந்த வாரம் பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியின் மூலமாக பெறப்படும். இது அந்நிய செலாவணி இருப்புக்களை அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.