அமெரிக்காவில் சியாட்டில் நகரில் ஜாதி பாகுபாட்டிற்கு தடை: இந்திய வம்சாவளி கவுன்சிலர் தீர்மானம்!!
அமெரிக்காவிலேயே முதல் முறையாக ஜாதி பாகுபாட்டிற்கு அந்நாட்டின் சியாட்டில் நகரத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 42 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அங்கு இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சியாட்டில் நகர் மன்றத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஷாமா சாவந்த், தாக்கல் செய்த தீர்மானத்தில், `சியாட்டிலில் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் ஜாதி பாகுபாட்டையும் சேர்க்க வேண்டும்,’ என்று கோரியிருந்தார்.
இதன் மீதான வாக்கெடுப்பில், இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தது. இதையடுத்து சியாட்டில் நகரில் ஜாதி பாகுபாட்டிற்கு தடை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.