திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு ரூ.1 கோடி கடன் !!
கேரளாவில் உள்ள மிகப்பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வைரம், நவரத்தின கற்கள் உள்பட விலை உயர்ந்த ஆபரணங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு கணக்கீடும் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இந்த கோவில் சர்வதேச அளவில் பிரபலமானது. கோவிலுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு செல்வ செழிப்புமிக்க கோவில் ரூ.1 கோடி கடன் பாக்கியில் சிக்கி தவிப்பதாக வெளியான செய்தியால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:- பத்மநாபசாமியை தரிசனம் செய்ய கோவிலுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் மற்ற கோவில்களை போல் நடை வருமானமோ, காணிக்கை வருமானமோ அதிக அளவில் கிடைப்பதில்லை. இந்த நிலையில் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் வகைக்கு கோவில் நிர்வாகம் மாதம் ரூ.1.25 கோடி செலவு செய்கிறது. இந்த நிலையில் கோவில் அன்னதானம் மற்றும் அன்றாட பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கிய வகையில், கேரள அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.73.57 லட்சம் கடன் நிலுவை இருந்தது.
இந்த நிலையில் தற்போது வரை செலுத்த வேண்டிய கடன் ரூ.1 கோடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து, கடன் தொகையை உடனடியாக செலுத்த கோரி கேரள நுகர்பொருள் வாணிபகழகம் சார்பில் கோவில் செயல் அதிகாரிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. பணத்தை செலுத்தாவிட்டால், பொருட்கள் சப்ளை நிறுத்தப்படும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.