இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது : ஜனாதிபதி!!
இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தேர்தலை பிற்போடுங்கள்,நாங்கள் கூச்சலிட்டு பின்னர் அமைதியாகி விடுகிறோம் என என்னிடம் பலமுறை கோரிக்கை விடுத்தவர்கள் தற்போது நான் தேர்தலை பிற்போடுவதாக என்மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பொருளாதாரத்தை பாதுகாக்கவே முன்னுரிமை வழங்குகிறேன். அதனை செய்யாவிட்டால் எமக்கு நாடு இல்லாமல்போகும் அதனால் நாட்டை இல்லாமலாக்கி அரசியலமைப்பை பாதுகாக்க முடியுமா என கேட்கிறேன். நாட்டை பாதுகாத்தால்தான் அரசியலமைப்பை பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிமை இடம்பெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக உரையாற்றியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்னால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியிடம் தெரிவிக்கையில், தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் நிதி ஒதுக்கி இருக்கிறது. ஒதுக்கிய பணத்தை நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி அதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்காமல் இருப்பதே தற்போதுள்ள பிரச்சினை. அதனால் தேர்தல் ஆணைக்குழு கோரும் 10 பில்லியன் ரூபாவை வழங்குமாறு கேட்கிறோம்.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை அறிவித்தால், நிதி அமைச்சு, அரசாங்க அச்சம் உட்பட அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அது அவர்களின் கடமை. ஒத்துழைப்பு வழங்காவிட்டால் 3வருடம் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்.
அத்துடன், அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாமல் நிதி ஒதுக்கவேண்டாம் எனவும் அரச நிறுவனங்கள் கடனுக்கு வேலை செய்யவேண்டாம் எனவும் அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதனால் அரசியலமைப்பு சரத்துக்களை சுற்றறிக்கையினூடாக நீக்க முடியுமா என ஜனாதிபதியை கேட்கிறேன் என்றார்.
அதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில்,
வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை என்னால் உடனடியாக தற்போது வழங்க முடியாது. வருட இறுதியாகும்போது இந்த நிதி செலவழிக்கப்படவேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் வருமானம் கிடைப்பதாக இருந்தால் எமக்கு செலவிடமுடியும். அவ்வாறு வருமானம் வருவதில்லை. ஒரு ரில்லியன் வருமானம் வரும்போது 3ரில்லியன் செலவிட முடியாது.
அப்படி என்றால் பணம் அச்சிட பாராளுமன்றம் அனுமதிக்கவேண்டும். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் பிரகாரம் பணம் அச்சிடமுடியாது. அதனால் இருக்கும் நிதியின் அடிப்படையிலேயே செலவிட முடியும்.
அடுத்ததாக சுற்றறிக்கை ஊடாக அரசியலமைப்பை மீற முடியாது. ஆனால் தேர்தல் திகதியை மூன்றுபேர் இருந்து தீர்மானிக்கவேண்டியதை இரண்டு பேர் தீர்மானிக்க முடியாது. அப்படி இருந்தால் எவ்வாறு தேர்தலை நடத்துவது? அதிகாரிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டி ஏற்படும். அதனால் நாங்கள் சட்டத்தன் பிரகாரமே செயற்படுகிறோம் என்றார்.
இதன்போது எழுந்த கபீர் ஹாசிம் எம்.பி. எழுந்து,
வருமானவரி திணைக்களம் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை 118 பில்லியன் ரூபாய் வருமானமாக பெற்றுள்ளதுடன் இந்த மாதம் இறுதியாகும்போது 168 பில்லியன் ரூபாய் வருமானமாக பெற்றுக்கொள்வதே இலக்காகும் என தெரிவித்திருக்கிறது.
அப்படியாயின் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்குவது பெரியவிடயமல்ல. தேவையாக இருந்தால் வழங்க முடியும். அரசாங்கம் தேர்தலுக்கு பயம். மக்களுக்கு இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் தேர்தலை கேட்கின்றனர்.
பொருளாதார குற்றம் செய்தவர்களுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதாக தெரிவித்தீர்கள். ஆனால் இதுவரை செய்யவில்லை என்றார்.
இதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில்,
20இலட்சம் வரிய குடும்பங்களுக்கு 20 கிலோ அடிப்படையில் அசிரி வழங்கவும் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு வழங்கவும் அதேபோன்று சிறிய வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் உறுதியான தகவல் கிடைக்கும் வரைக்கும் தற்போதுள்ள பணத்தை தொடமாட்டேன். ஏனெனில் அவசர தேவை ஏற்பட்டால் எமக்கு நிதி தேவையாகும்.
அத்துடன் பணம் வழங்க தேர்தல் இல்லை. நான் பொருளாதாரத்தை பாதுகாக்கவே முன்னுரிமை வழங்குகிறேன். அதனை செய்யாவிட்டால் எமக்கு நாடு இல்லை.
அதனால் நாட்டை இல்லாமலாக்கி அரசியலமைப்பை பாதுகாக்க முடியுமா என கேட்கிறேன், நாட்டை பாதுகாத்தால்தான் அரசியலமைப்பை பாதுகாக்க முடியும். அதனால் 3பேர் அமர்ந்து தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்குமாறு தெரிவியுங்கள். அதன் பின்னரே அதற்கு பணம் வழங்குவதா இல்லையா என பார்க்க முடியும். அவ்வாறு தீர்மானம் ஒன்றை எடுத்திருக்காவிட்டால் எனக்கோ அரசாங்கத்துக்கோ பிரச்சினை இல்லை.
பொருளாதார குற்றம் செய்தவர்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க எந்த பிரேரணையும் நீங்கள் கொண்டுவர வில்லை. பிரேரணையை கொண்டுவந்தால் அதற்கான திகதியை நான் வழங்குகின்றேன் என்றார்.
இதன்போது எழுந்த ஹர்ஷண ராஜகருணா தெரிவிக்கையில்,
பொருளாதார குற்றம் செய்தவர்கள் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்குமாறு 3மாதங்களுக்கு முன்னர் சபாநாயகருக்கு நாங்கள் அறவித்திருந்தோம். ஆனால் அரசாங்கம் அதனை செய்ய வில்லை. நீங்களும் பொருளாதார மோசடி செய்தவர்களின் ஆதரவில் வந்ததால் உங்களால் எதனையும் செயடய முடியாமல் இருக்கிறது என்றார்.
அதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில்,
மார்ச் 3ஆம் வாரம் இந்த பிரேரணை தொடர்பில் திகதி ஒன்றை வழங்குமாறு நான் தெரிவிக்கிறேன். அதனால் நீங்கள் ஏதாவது பிரேரித்தால். அதனை செய்வதற்கு நாங்கள் தயாரக இருக்கிறோம் என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில்,
தேர்தல் ஆணைக்குழு 3உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்றால். புதிய தேர்தல் ஆணைக்குழு அமைத்து தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். அவ்வாறு இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுப்பதுபோல் இதனை செய்ய முடியாது என்றார்.
அதற்கு ஜனாதிபதி,
நீங்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொண்டு புதிய தேர்தல் ஆணைக்குழுவை அமைக்கிறேன் என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த சாணக்கியன் எம்.பி,
தேர்தல் நடத்த பணம் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய பணம் அச்சிட முடியாது என இவ்வாறு தொடர்ந்து சென்றால் நீங்கள் ஜனாதிபதி தேர்தலை, பாராளுமன்ற தேர்தலை, மாகாணசபை தேர்தலை நடத்துவதில்லையா? என கேட்கிறேன் என்றார்.
அதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில்,
நான் சத்தியப்பிரமாணம் செய்த பிரகாரம் அனைத்து தேர்தல்களையும் அதற்குரிய காலத்தில் நடத்துவேன் என்பதை தெரிவிக்கிறேன் என்றார்.