மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடாமலிருக்க ஜனாதிபதி தீர்மானம்!!
இலங்கையில் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடாமலிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானம் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2019 ஆம் ஆண்டு போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடத் தீர்மானித்திருந்தார்.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மெரில் ப்ரல்லேவினால் குறித்த தீர்மானம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.