மதுபான கொள்கை ஊழல் வழக்கு: அரவிந்த் கேஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!!
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தினர்.
விசாரணைக்காக பிபவ் குமார் டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகினார். அவரது வாக்குமூலத்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பிபவ் குமார் உள்ளிட்ட 36 பேர் மீது ரூ.1000 கோடி பணமோசடி தொடர்பான ஆதாரங்களை அழிக்க 170 செல்பேசி அழைப்புகள் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுகிறது” என்று தெரிவித்தனர்.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அல்லது வழக்குகள் பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை இதுதொடர்பாக 9 பேரை கைது செய்துள்ளது.
அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியில், 2022ஆம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலின் போது, அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்திற்காக, டெல்லி புதிய மதுபான கொள்கையை ரத்து செய்த ஊழலில் பெற்ற பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவாரத்திற்கு பின்னர் இந்த விவசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அரசு கடந்த ஆண்டு நவ.17 ஆம் தேதி அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் பணமோசடி நடந்திருப்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கேஜ்ரிவால் அரசு இந்தாண்டு ஜூலை மாதம் புதிய மதுபானக் கொள்கையை திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.