பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் தங்கச் சுரங்கத்திற்கு நிகரானது – பிரதமர் மோடி!!
பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதது என்று பிரதமர் மோடி இன்று(பிப்.23) தெரிவித்தார். தொடர்ந்து அதில் முதலீடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடி, 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பசுமை வளர்ச்சி குறித்த பல்வேறு அறிவிப்புகள் குறித்த இணையவழி கருத்தரங்கில் வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “பசுமை எரிசக்தித்துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நான் பங்குதாரர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு முதலீடு செய்ய வருமாறு அழைக்கிறேன். சூரிய ஒளி, காற்று, உயிரிவாயு போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளில் இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு நிகரானது. இந்திய அரசு உயிரி எரிவாயுவில் அதிக கவனம் செலுத்துகிறது. இது முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டுவரும்.
இந்தியா 10 சதவீத எத்தனால் பயன்பாட்டு இலக்கை தான் திட்டமிட்டத்தை விட ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே எட்டி விட்டது. அதேபோல், 9 ஆண்டுகளுக்கு முன்பே, 40 சதவீத பூமிக்கடியில் இருந்து பெறப்படும எரிபொருள் திறனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டிலிருந்து மத்திய பட்ஜெட்கள் சமகால சிக்கல்கள் மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. புதிய யுகத்தின் சீர்திருத்தங்களையும் கவனத்தில் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், தேசிய ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் தனியார்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் வாகன அகற்றத்திற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 15 ஆண்டுகள் கடந்த 3 லட்சம் அரசு வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்தியா பேட்டரி சேமிப்பு திறனை 125 ஜிகா வாட்ஸாக அதிகரிக்க இருக்கிறது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 500 ஜிகா வாட்ஸாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.