;
Athirady Tamil News

சண்டையிட்டு சோர்வடைந்த கவுன்சிலர்கள்.. தூங்கி எழுந்து மீண்டும் மோதல்… போர்க்களமான டெல்லி மாநகராட்சி அவை!!

0

டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று, மாநகராட்சியையும் கைப்பற்றியது. எனினும், துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையால், தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது எனக்கூறி ஆம் ஆத்மி போர்க்கொடி உயர்த்தியது. இதனால் மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம் நடந்தபோதும், ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிகழ்ந்த மோதலால் கூட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, மேயரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது.

இந்நிலையில், கடந்த 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவை அடுத்து, மேயர் தேர்தலுக்காக மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்கு துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா ஒப்புதல் வழங்கினார். இதன்படி, நேற்று காலையில் மாநகராட்சி கூட்டம் கூடி, மேயர் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் பதிவான 266 வாக்குகளில், ஆம் ஆத்மி கட்சி தரப்பில் போட்டியிட்ட ஷெல்லி ஓபராய் (150 வாக்குகள்), பா.ஜ.க.வின் ரேகா குப்தாவை (116 வாக்குகள்) வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் துணை மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் வெற்றி பெற்றார். அதன்பின்னர் நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறை தொடங்கியது. மாலை 6:30 மணியளவில், நிலைக்குழுத் தேர்தல் தொடங்கியவுடன் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருந்ததால் பா.ஜ.க. கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடாமல் அமளி செய்தனர். இதனால் ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.

அங்கிருந்த காகிதங்களை சுருட்டி வீசியும், தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தும் ஒருவரை ஒருவர் தாக்கி அமளியில் ஈடுபட்டனர். மேயர் மீதும் பா.ஜ.க. கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது. கூட்டம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று தன்னை கட்டாயப்படுத்தினார்கள் என்றும், பா.ஜ.க. கவுன்சிலர்கள் தன்னை தாக்க முயன்றனர் எனவும் டெல்லி மேயர் கூறினார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கோஷங்களுக்கு மத்தியில் மாநகராட்சி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின.

எனினும், கூட்டத்தில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதால் அடுத்தடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 முறை ஒத்திவைப்புக்குப் பின்னர், மாநகராட்சி கூட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து கடுமையான சண்டை ஏற்பட்டது. பெண் உறுப்பினர்கள் தலைமுடியை பிடித்து, இழுத்தும், ஒருவரை ஒருவர் தள்ளி விடவும் செய்தனர். அவர்களை விலக்கி விட முயன்ற சில பெண் உறுப்பினர்கள் கீழே விழக்கூடிய சூழலும் காணப்பட்டது. ஆண் உறுப்பினர்கள் அவையில் கோஷங்களை எழுப்பியபடி காணப்பட்டனர். சிலர் மேஜை மீது ஏறி நடந்து செல்லவும் செய்தனர். இந்த தொடர் அமளியால் நேற்றிரவு 5-வது முறையாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால், டெல்லி மாநகராட்சி அவை ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதுபற்றிய வீடியோவும் வெளியானது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் 2 நாளாக அவையை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். நேற்றிரவு சண்டை போட்ட அசதியில் அவைக்குள்ளேயே கவுன்சிலர்கள் சிலர் காலை நீட்டி படுத்தபடியும், மேஜையின் முன்புறம் சாய்ந்தபடியும் படுத்து உறங்கி உள்ளனர். இதுபற்றிய புகைப்படங்களும் வெளிவந்து உள்ளன. இன்று காலையில் மீண்டும் அவை கூடியதும் பிரெஷ்ஷாக எழுந்து அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கினர். மீண்டும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

இரு கட்சி உறுப்பினர்களும் அவைக்கு உள்ளேயே சாப்பிட்டு, தூங்கி பின்னர் மீண்டும் எழுந்து மோதி கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சண்டையில், பிளாஸ்டிக் பாட்டில்கள், ஆப்பிள் பழங்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஒருவர் மீது மற்றொருவர் வீசினர். நிலைக்குழு உறுப்பினர் தேர்தலை நடத்த முடியாத அளவுக்கு, தொடர்ந்து அமளி நீடித்ததால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.