திருமலையில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்குவது மீண்டும் தொடக்கம்!!
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழுமலையானை எளிதாக தரிசிக்க திருமலையில் உள்ள கோகுலம் அலுவலகத்தில் நேற்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகளை நேரில் (ஆப் லைன்) வழங்குவதை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த மாதத்துக்கு (பிப்ரவரி) ஏற்கனவே 750 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே.
எனவே திருமலையில் வருகிற 28-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 150 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். அடுத்த மாதம் (மார்ச்) முதல் 1000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளில் 500 ஆன்லைனில், 400 திருமலையில் உள்ள கோகுலம் அலுவலகத்தில், 100 ரேணிகுண்டா விமான நிலையத்தில் வழங்கப்படும். தரிசன டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் தங்களின் ஆதார் அட்டையுடன் நேரடியாகச் சென்றால் மட்டுமே வழங்கப்படும். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு நேரில் வந்து ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.