வரி அறவீடு எம்மையும் பெரிதாக பாதித்துள்ளது : இது குறித்து எவரும் பேசுவதில்லை என்கிறார் அமைச்சர் சுசில்!!
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்வதற்காக மக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமும் பெரும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்கின்றோம் என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.
குறுகிய காலத்தில் நாட்டு மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக நாமும் அர்ப்பணிப்பு செய்துள்ளோம். வரி அறவீடு எம்மையும் பெரிதாக பாதித்துள்ளது அது பற்றி எவரும் பேசுவதில்லை.
வரி விதிப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 90.000 ரூபாவும் அமைச்சர்களின் சம்பளத்தில் 2 லட்சத்து 41.000 ரூபாவும் அறவிடப்படுகிறது. நான் சபை முதல்வராக செயற்பட்டும் சம்பளத்தில் சொச்சம் தான் எனக்கும் கிடைக்கின்றது. இதனால் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் நோக்கத்திற்காக எவரும் விமர்சனங்களை மேற்கொள்ள முடியும் எனினும் நாம் இரவு பகல் என பாராது மக்களின் இயல்பு வாழ்க்கையை தோற்றுவிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
நாம் கொழும்பிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதால் எமக்கு பாரிய பிரச்சினை கிடையாது. எனினும் பதுளை, அம்பாறை பகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அசௌகரியமான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
எவ்வாறெனினும் அரசாங்கம் அவ்வாறான வரி விதிப்பை மேற்கொள்ளா விட்டால் அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாத சம்பளத்தைக் கூட வழங்க முடியாத நிலையே ஏற்பட்டிருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை எந்த நாடும் எமக்கு கடன் தரத் தயாரில்லை இதுதான் யதார்த்தம் என்றார்.