;
Athirady Tamil News

தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை விடுத்து ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் – சாணக்கியன்!!

0

அரசாங்கத்திற்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக முறையில் இடமளிக்காவிட்டால் ஜனநாயகத்திற்கு எதிரான முறையில் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.

ஆகவே நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை விடுத்து ஜனாதிபதி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அமெரிக்க பாதுகாப்பு முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு பாரிய பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மாய உலகத்தில் இருக்கிறார்களா என்று என்ன தோன்றுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என குறிப்பிடும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் தேவையற்ற செலவுகளுக்கு நிதி செலவு செய்வதை அவதானிக்க முடிகிறது.

உள்ளுராட்சிமன்றத்தேர்தல் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றி அனைத்து விடயங்களையும் கேலிக்கூத்தாக்கியுள்ளார்.

பொருளாதார நெருக்கயில் இருந்து மீண்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை எவராலும் குறிப்பிட முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.

அரசாங்கத்திற்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக முறைக்கு அமைய இடமளிக்காவிட்டால் ஜனநாயகத்திற்கு எதிரான வழியில் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.

மக்கள் தமது நிலைப்பாட்டை போராட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தும் போது இராணுவத்தை களமிறக்கி நாட்டில் அமைதியற்ற தன்மையை தோற்றுவித்து தேர்தலை முழுமையாக பிற்போடும் நோக்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது, பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு என்பது வேறுப்பட்டது என்பதை முதலில் ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.தமது தேவைக்கு அமைய ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியாது.

நாட்டு மக்களின் விருப்பத்திற்கு முரணாக பலவந்தமான முறையில் ஆட்சியில் இருக்க ஜனாதிபதியும்,அரசாங்கமும் முயற்சிக்கிறது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாக வேண்டும்,அதற்கு நாட்டு மக்களின் விருப்பத்துடனான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும், ஆகவே நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வந்தவர் மற்றும் அதனை முன்மொழிந்தவர் தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும்.இவர்களின் அரசியல் செயற்பாட்டை நாட்டு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் தற்போது முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.

இவர்கள் தான் கடந்த காலங்களில் முஸ்லிம் அடிப்படைவாதம், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக கடும் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.இவ்விரு காரணிகளும் தோல்வியடைந்தால் இவர்கள் தற்போது வெளிநாட்டு சூழ்ச்சி என்ற விடயத்தை கையில் எடுத்துள்ளார்கள்.தேர்தல் செய்ய ஏதும் இல்லாத காரணத்தால் தற்போது அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளை பற்றிக் கொண்டுள்ளார்கள்.

உண்மையில் இவர்களுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை காணப்படுமாயின் இவர்கள் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நாட்டில் இல்லாத போது சட்டத்திற்கு முரனான வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.