தேச பாதுகாப்புக்காக எதையும் செய்ய துணியும் நாடு இந்தியா: ஜெய்சங்கர் பெருமிதம்!!
புனேவில், சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன. ஆனால், தேச பாதுகாப்பு போல், கூர்மையான சவால்கள் வேறு எதுவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக நமது மேற்கு எல்லையில் நமக்கு சோதனைகள் கொடுத்தனர். இப்போது நிலைமையில் சற்று மாற்றம் வந்துள்ளது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சில விஷயங்கள் நடந்தன. வடக்கு எல்லையில் நமக்கு சோதனை அளிக்கிறார்கள். இந்த சோதனைகளை இந்தியா எப்படி கடந்து வந்துள்ளது என்பதுதான் நமது திறமையை காட்டுகிறது.
தேசத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நாடு என்பதுதான் இப்போது இந்தியாவுக்கு உள்ள கவுரவம். இது ஒரு சகிப்புத்தன்மையும், பொறுமையும் கொண்ட நாடு. மற்றவர்களுடன் சண்டை போடும் நாடு அல்ல. ஓரங்கட்டக்கூடிய நாடு அல்ல. நம்மை சுயேச்சையான நாடாக உலகம் பார்க்கிறது. நாம் நமது உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுக்காமல் தெற்குலக நாடுகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பதாக உலகம் பார்க்கிறது. ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்த காலகட்டத்தில், எந்த அமைப்பிலும் இடம்பெறாத நாடுகளின் நலன்களுக்காகவும் பாடுபட உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.