சிவசேனா தலைவர் பதவியை தவிர்த்த ஏக்நாத் ஷிண்டே!!
சிவசேனா கட்சி கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக உடைந்தது. யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்த போதும், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே வகித்து வரும் கட்சி தலைவர் (சிவசேனா பக்சா பிரமுக்) பதவியை ஏற்பதை தவிர்த்து உள்ளார்.
கட்சி உடைந்த போது ஏக்நாத் ஷிண்டே அவருக்கு முதன்மை தலைவர் (முக்கிய நேத்தா) என்ற பதவியை உருவாக்கி கொண்டார். தொடர்ந்து அவர் அந்த பதவியில் நீடிக்க உள்ளார். உத்தவ் தாக்கரே வகித்து வரும் பதவியை தற்போது எடுத்துகொண்டால், அது தாக்கரே மீது மக்கள் இடையே அனுதாபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பக்சா பிரமுக் பதவியை ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது. அதே நேரத்தில் கட்சியில் அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஏக்நாத் ஷிண்டே வசம் தான் இருக்கும் என அவர் தரப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார். இதுதொடர்பாக ஷிண்டே தரப்பு செய்தி தொடர்பாளர் சீத்தல் மாத்ரே கூறுகையில், “ஏக்நாத் ஷிண்டே தான் எங்கள் முதன்மை தலைவர்.
தொடர்ந்து அவர் அந்த பதவியில் இருப்பார். எங்கள் செயற்குழுவிடம் எல்லா உரிமைகளும் உள்ளன. கோர்ட்டு வழக்குகள், முக்கியமான விஷயங்களை ஏக்நாத் ஷிண்டே பார்த்து கொள்வார்” என்றார். ஷிண்டே தரப்பை சேர்ந்த மூத்த தலைவர் கூறுகையில், “உத்தவ் தாக்கரேயை அவரது பதவியில் இருந்து நீக்கி எந்த அறிவிப்பையும் வெளியிட நாங்கள் விரும்பவில்லை. மக்களை பொறுத்தவரை சிவசேனாவும், தாக்கரேவும் ஒன்று தான். ஏக்நாத் ஷிண்டேவை தலைவராக நியமித்தால் அது தவறாக போய்விடும்.
தாக்கரே தரப்புக்கு அனுதாப அலையால் ஆதாயம் ஏற்பட கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். இந்த அடிப்படையில் சிவசேனா பவன், சாக்கா அலுவலகங்களை உரிமைகோர மாட்டோம் என ஏக்நாத் ஷிண்டே கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்” என்றாா். சிவசேனா தலைவர் பதவி விவகாரத்தில் ஷிண்டே சிவசேனாவினர் பாதுகாப்பாக காய்நகர்த்தி இருப்பதாக உத்தவ் தாக்கரே அணி செய்தி தொடர்பாளர் மனிஷா காயன்டே கூறியுள்ளார்.