“தேர்தல் நிதியை நிறுத்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை இல்லை” !!
ஆளுகை தொடர்பாக நாட்டில் நிலவும் சீரழிவு மற்றும் ஜனநாயகச் செயல்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து வருவதை ஆழ்ந்த கவலையுடன் அவதானிப்பதாக இலங்கை திருச்சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டை ஆளும் பணியை ஒப்படைத்தவர்களின் கொள்கை தவறுகள், ஊழல், வீண்விரயம் மற்றும் தவறான நிர்வாகத்தால் நாடு திவாலானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சரியான நேரத்தில் சரியானதைச் செய்திருந்தால் தற்போது மக்கள் எதர்கொள்ளும் மிகவும் வேதனையான மற்றும் சுமையாக காணப்படும் பொருளாதார நடவடிக்கைகளை தவிர்த்திருக்கலாம்.
புத்திசாலிகள் மற்றும் கடின உழைப்பாளிகள் கொண்ட இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் தற்போது இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது தெளிவான உண்மை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான நடவடிக்கையாகும், இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்கு முன்பு சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச செலவில் பொழுதுபோக்கு காரியங்களை நடத்திய அரசாங்கத்துக்கு தேர்தல் நிதியை நிறுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை.
வெளி கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான இயல்புநிலை முடிவை அரசாங்கம் அறிவித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. வெளி உலகத்திற்கான தனது கடனை கட்ட தவறவிட்ட பிறகும் தேர்தலுக்கு நிதியளிக்க முடியவில்லை என்று கூறும் எந்தவொரு அரசாங்கமும் பதவியில் நீடிக்க சட்டபூர்வமான அதிகாரம் இல்லை.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளவாறு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வளங்களை தேர்தல் ஆணையம் மற்றும் பிற அரச நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எந்தவொரு ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு குடிமக்கள் தங்களுக்கென தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பிரதிநிதிகளை உரிய நேரத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பேயாகும். அந்த வாய்ப்பை எமது மக்களுக்கு மறுப்பது நாம் இப்போது சர்வாதிகாரத்தின் கீழ் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தும்.
நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் மூலம் ஆர்ப்பாட்டங்களை கலைக்க ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளை நிறுத்துவது வெறுமனே தீர்வாகாது.
ஆட்சியில் இருக்கும் எந்தவொரு அரசாங்கமும், அடிப்படை உண்மைகளுக்குப் புறம்பாக பாராமுகமாக இருக்கும்போது இந்தப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாட்டைத் திசைதிருப்ப எந்தத் தரப்பிலிருந்தும் ஆதரவைப் பெற முடியாது. நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமையும் ஜனநாயகமும் தேவை.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.