பாலஸ்தீனத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: ஹமாஸ் தீவிரவாதிகள் வேட்டையில் 11 பேர் உயிரிழப்பு !!
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரமான நப்லஸ் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தின் நப்லஸ் நகருக்குள் புகுந்து 11 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுகொன்றதையடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் முகாமிட்டுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் நப்லஸ் நகருக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வெடிகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிசூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினர். 6 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில் அவற்றில் 5 ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் வழிமறித்து அழித்தது. இந்த தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் விமானம், மத்திய காசா உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.