குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதித்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்-அங்கஜன்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்தமயமாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்- பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரை கட்டுமானச் செயற்பாட்டினைக் கண்டித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தனது ஊடகச் செய்தியில்,
12/06/2022க்கு பின்னராக குருந்தூர் மலையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாதென நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த பின்னரும் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் காணப்படுவதாக அறிய முடிகிறது.
இந்தச் செயற்பாடு நாட்டினுடைய நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
நீதிமன்ற கட்டளையை மீறியவர்களை கைது செய்ய வேண்டிய பொலிஸாரே குறித்த அவமதிப்புச் செயற்பாட்டிற்கு பாதுகாப்பு வழங்கியிருப்பதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
பாதுகாப்புத் தரப்பினர் தமது கடமையை மீறி ஓர் மதத்தினை அடாத்தாக பரப்ப முற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது மக்கள் பரம்பரையாக வழிபட்டு வந்த குருந்தூர்மலை ஆதி சிவன் ஆலயத்தின் புனிதத்தை பாதிக்கும் வகையில் பௌத்தமயமாக்கல் செயற்பாடு துரித கதியில் இடம்பெற்று வருகிறது.
ஓர் மதத்தின் தனித்துவத்தை பாதிக்கும் வகையில் மற்றொரு மதத்தை திணிக்க முடியாது.
எனவே இவ்விடயத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதித்த சகலருடன் உடனடியாக தண்டிக்கப்பட்டு- பௌளத்தமயமாக்கல் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”