திருக்கோவில்கள் சார்பில் 2-ம் கட்டமாக 161 ஜோடிகளுக்கு திருமணம் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன!!
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: 2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் கோவில்களே ஏற்கும்” என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4.12.2022 அன்று முதற்கட்டமாக திருவான்மியூரில் சென்னை மண்டலங்களை சேர்ந்த கோவில்களின் சார்பில் 31 ஜோடிகளுக்கும், இதர இணை ஆணையர் மண்டலங்களில் 186 ஜோடிகளுக்கும் ஆக மொத்தம் 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக, நேற்று 19 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த கோவில்களின் சார்பில் 161 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யத்துடன் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டுப் புடவை, சீர்வரிசைப் பொருட்களாக பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், கைக்கடிகாரங்கள், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் செய்திருந்தனர்.
2-ம் கட்டத்தில் வேலூர் மண்டலத்தில் 12 ஜோடி களுக்கும், சேலம் மண்ட லத்தில் 17 ஜோடிகளுக்கும், கோயம்புத்தூர் மண்ட லத்தில் 8 ஜோடிகளுக்கும், தஞ்சாவூர் மண்டலத்தில் 17 ஜோடிகளுக்கும், மயிலாடு துறை மண்டலத்தில் 3 ஜோடிகளுக்கும், விழுப்பு ரம் மண்டலத்தில் 4 ஜோடி களுக்கும், திருச்சி மண்ட லத்தில் 9 ஜோடிகளுக்கும், மதுரை மண்டலத்தில் 5 ஜோடிகளுக்கும், சிவகங்கை மண்டலத்தில் 12 ஜோடிகளுக்கும், திருநெல் வேலி மண்டலத்தில் 3 ஜோடிகளுக்கும், காஞ்சிபுரம் மண்டலத்தில் 8 ஜோடிகளுக்கும், ஈரோடு மண்டலத்தில் 2 ஜோடி களுக்கும், திருப்பூர் மண்ட லத்தில் 13 ஜோடிகளுக்கும், திருவண்ணாமலை மண்ட லத்தில் 13 ஜோடிகளுக்கும், கடலூர் மண்டலத்தில் 10 ஜோடிகளுக்கும், தூத்துக்குடி மண்டலத்தில் 9 ஜோடிகளுக்கும், திண்டுக்கல் மண்டலத்தில் 16 ஜோடி களுக்கும் ஆக மொத்தம் 161 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் திருக்கோவில்களின் சார்பில் 378 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களுக்கான திட்டச் செலவினத் தொகையை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.