துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது!!
துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
5.20 லட்சத்துக்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளன. துருக்கியின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்தது. அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன.