13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை இல்லை – மஹிந்த!!
தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கம் மற்றும் கட்சி தங்களின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் தேர்தலை நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தினால் இந்த அரசாங்கம் வெற்றி பெறுவது நிச்சயமற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி நகரில் வெள்ளிக்கிழமை (24) மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்துரைகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நிதி நெருக்கடி என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நிதி இருந்தாலும் தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தவறாகும்.
அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமாயின் தேர்தலை நடத்த வேண்டும்.
எமது ஆட்சியில் தேர்தல் உரிய காலத்திற்கு முன்னதாகவே இடம்பெற்றது, அதற்கு காரணம் வெற்றி வெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இந்த அரசாங்கம் வெற்றிபெறும் என்பது நிச்சயமற்றது. மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய இடமளிக்க வேண்டும் ஆகவே தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். அதனையே நானும் கருதுகிறேன் என்றார்.