நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை நேரடியாக ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!!
களப்பினை ஆழப்படுத்தும் செயற்பாடுகள் உரிய ஆய்வுகளின் அடிப்படையில், எந்தத் தரப்பினரையும் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நீர்கொழும்பு களப்பின் ‘யக்கா வங்குவ’ எனும் பகுதியை பார்வையிட்ட பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீர்கொழுப்பு பிரதேசத்தினை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி கடற்றொழிலாளர்களின் கடல் போக்குவரத்து பாதையாக இருக்கின்ற நீர்கொழும்பு களப்பின் ‘யக்கா வங்குவ’ பகுதியை புனரமைத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதேவேளை, குறித்த பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுமாயின், அதனை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கருவாடு உற்பத்தி பாதிக்கப்படும் எனவும், அதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இன்னொரு தரப்பினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்ந்தப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் சகிதம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகளை நேரடியாக ஆராய்ந்ததுடன், பிரதேச மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டார்.